திங்கள், 12 மே, 2014

அண்ணன் பெரியார் சாக்ரடீசு மறைவு !


என்ன சொல்வதென்று தெரியவில்லை !
அண்ணன் பெரியார் சாக்ரடீசு மறைவு !
தந்தை பெரியார் கடைசியாய் சைதாபேட்டையில் 
உரையாற்றிய நாள் பார்த்து சொல்லும்படி கூறினார் என்று சகோதரி செல்வலெட்சுமி  கூறினார் அவரிடம் பார்த்துவிட்டு 18.02.1973 என்று சொன்னேன் ! 
பின்னர் நானும் தொலைபேசியில் அழைத்து அதே தகவலை சொன்னேன் !
அது எங்கள் கடைசி உரையாடலாக போய்விட்டது !
அதன்பின் நான் மருத்துவமனையில் தான் பார்த்தேன் !
 வெள்ளிகிழமை செவிலியர் ஆய்வு செய்வதற்காக 
பெரியார் சாக்ரடீசு என்று அழைத்தபோது கண்ணை திறந்து பார்த்தார் !
அதை சொல்லி நம்பிக்கையூட்ட வெளியில் வந்தேன் 
ஆனால், எல்லோரும் அழுதுகொண்டிருந்தர்கள் !
 நான் மட்டும் நம்பிக்கையோடு இருந்தேன்!
வழக்கம் போல் என் நம்பிக்கை பொய்த்துவிட்டது!
பின்னர் மேலும் மோசமான நிலைக்கு உடல்நிலை ஆனது !
ஞாயிறு முழுவதும் அங்கேயே இருந்தேன் !
அண்ணன் வைகறை அவர்கள் மதியம் வந்து ஏதாவது சாப்பிட்டுச் செல்லும்படி வற்புறுத்தினார் ! ஆனால் நான் மறுத்துவிட்டு காத்திருந்தேன் கண் திறப்பார் என்று !
அன்று இரவு ஒரு அறுவை சிகிச்சை செய்தார்கள் !
அதன் பிறகு  அறுவைசிகிச்சை செய்துவிட்டு மருத்துவர் சொன்ன நம்பிக்கைக்குரிய வார்த்தைகளோடு திடலுக்கு வந்துவிட்டேன் ! 
காலை நீதிமன்றம் சென்றுவிட்டு வந்து ஆசிரியர் அய்யாவை பார்த்தேன்  
 ஆசிரியர் எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் எழுதிய ஒரு 
கட்டுரையை தேடி எடுத்துவரச்  சொன்னார்!
இதற்கு முன் இது போன்ற பணிகளுக்கு அண்ணன் சாக்ரடீசு அவர்களின் உதவியை பல முறை நாடியிருக்கிறேன் !
நேற்று முடியவில்லை தோழர் பிரின்ஸ் கண்ணில் பட்டார் !
அவரிடம் கேட்டேன் !
பின்னர் தான் தெரிந்தது நான் பிரின்ஸிடம் கேட்ட சிறிது நேரத்திற்கு முன்புதான் அண்ணன் மூளை சாவு என்ற நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறார் என்பது !
 அந்த நிலையை என்னிடம் சொல்லாமல் பிரின்ஸ் இணையத்திலும் தமிழர் தலைவர் நூலிலும் தேட சொன்னார் !
நானும் அதை எடுத்து ஆசிரியர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு , மருத்துவமனைக்கு கிளம்பினேன் !
தோழர் சுரேஷ் தகவலை கூறினார் !
எனக்கு எனது பணிதொடர்பான எல்லா ஆலோசனைகளையும் தந்த 
எங்கள் ஆருயிர் அண்ணன் மறைந்தார் என்றவுடன் 
என்ன செய்வதென்று தெரியவில்லை 
அந்த நேரம் வரை முதல் நாள் அறுவைசிகிச்சை செய்துவிட்டு மருத்துவர் சொன்ன நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை மட்டுமே நம்பிவந்த நான் அதிர்ந்து அழுதேன் !

பொதுவாக எதிர்மறையாகவே சிந்திக்கும் நான் முதல் முறையாக நேர்மையாக சிந்தித்தேன் !
காரணம் என்னால் ஏற்கமுடியாத நிகழ்வாக இதை எண்ணியதால் .....
எனக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தந்தவரை காணவில்லை எங்கே தேடுவேன் !